இந்தியாவில் முதன்முறையாக டெங்குவைத் தடுக்கும் தடுப்பூசி ‘க்யூடெங்கா’ அடுத்தாண்டு முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக ஜப்பானைச் சேர்ந்த டகேடா பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனமும், ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்ட டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனமும் சந்தைப்படுத்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

மழைக்காலங்களில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கிறது. காய்ச்சல் தீவிரமடைந்து ரத்த தட்டணுக்கள் குறையும்போது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் உருவாகிறது; உயிரிழப்புகளும் பதிவாகின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் டெங்குவின் தாக்கம் 11 மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. கடந்தாண்டு மட்டும் நாடு முழுவதும் 1.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 95 பேர் உயிரிழந்தனர். இந்தாண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் தினமும் 70 முதல் 100 பேர் வரை டெங்கு காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இறுதிகட்ட மருத்துவ சோதனையில், தடுப்பூசி செலுத்திய ஒராண்டுக்கு பின் 80.2% செயல்திறன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இரண்டாவது தவணை செலுத்திய 18 மாதங்களுக்கு பின், டெங்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுப்பதில் 90.4% பயனுள்ளதாகவும் கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு கடந்த ஜூலையில் இந்தியாவில் பயன்படுத்தவும் சந்தைப்படுத்தவும் ஒப்புதல் அளித்தது. தனியார் சந்தை வழியாக தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. உள்ளூர் நடைமுறைகள் நிறைவடைந்த பின், அடுத்தாண்டின் முதல் பாதியில் தடுப்பூசி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை; பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் விலையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.