சென்னையில் உள்ள தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்வது, மின் வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணிப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்கிறது. நீதிமன்ற அதிகாரம் உடைய அமைப்பாக இது தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.
கடந்த சில மாதங்களில் முக்கிய பதவிகள் காலியாகிய நிலையில் இந்த நியமனங்கள் வந்துள்ளன. இரண்டு உறுப்பினர்கள் ஓய்வு பெற்றதால் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களிலிருந்து உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. மேலும் மே மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்போது தலைவராக இருந்த மணிவண்ணன் ஜூன் இறுதியில் ராஜினாமா செய்தார்.
இந்த மூன்று பதவிகளுக்கும் புதியவர்களைத் தேர்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி டீக்கா ராமன் தலைமையில் தேர்வு குழுவை அரசு ஜூலையில் அமைத்தது. இதில் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் உறுப்பினர்களாக இருந்தனர். பலரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, செப்டம்பர் 15 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ராதாகிருஷ்ணன் தலைவர், மாஸ்கர்னஸ் உறுப்பினர், முத்து சாரதா சட்ட உறுப்பினர் என நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் மூவரும் சென்னை கிண்டியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர். ராதாகிருஷ்ணன் மின் வாரிய முன்னாள் தலைவராகவும், மாஸ்கர்னஸ் மின் பகிர்மான கழக முன்னாள் இயக்குநராகவும் பணியாற்றியவர். முத்து சாரதா ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஆவார். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ராதாகிருஷ்ணன் இம்மாத இறுதியில் ஓய்வு பெற இருந்த நிலையில் இந்த பதவியில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.





