மக்களிடம் இருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, 200 மது கடைகளை இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக சென்னை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு அமைந்த பின்னர், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் இருந்த 717 மது கடைகள் மூடப்பட்டன. ஆனால் வீடுகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள சில கடைகள் தொடர்ந்தும் இயங்குவதாகவும், இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பலர் அரசுக்கும் டாஸ்மாக் நிறுவனத்திற்கும் புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறப்படும் கடைகளின் விவரங்களை டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் சேகரித்து வருகின்றனர். அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் 200 கடைகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், புகார் வந்தால் கடையில் ஆய்வு நடத்தி பிரச்னை உறுதியாகும் நிலையில் அந்த கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்றார். மேலும், இந்த இடமாற்றத்திற்காக புதிய இடங்கள் தற்போது கண்டறியப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.