பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தயாரிக்கும் ‘மார்க்-1ஏ’ இலகு ரக போர் விமானங்களின் வினியோகத்தை இந்தாண்டு இறுதிக்குள் இந்திய விமானப்படைக்கு தொடங்க திட்டமிட்டுள்ளது. 2026 முடிவுக்குள் 10 விமானங்களை ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையில் இலகு ரக போர் விமானங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறப்படும் சூழலில், ‘மார்க்-1ஏ’ திட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விமானப்படைக்காக மொத்தம் 180 ‘மார்க்-1ஏ’ விமானங்களை வழங்க HAL உடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன; இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.10 லட்சம் கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 83 விமானங்களுக்கான முதல் ஒப்பந்தம் 2021 பிப்ரவரியில் கையெழுத்தானது. தொடர்ந்து 97 விமானங்களுக்கான இரண்டாவது ஒப்பந்தம் 2025 செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 2021 ஒப்பந்தத்தின் கீழ் முதல் விமானங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜி.இ. நிறுவனத்திடமிருந்து இன்ஜின்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் முக்கிய சான்றிதழ்களை பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் இதற்குக் காரணமாக கூறப்பட்டுள்ளன. இன்ஜின் வினியோகம் தடையின்றி தொடர்ந்தால், முதல் ஒப்பந்தத்தின் 83 விமானங்களை மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் வழங்க முடியும் என HAL தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மேம்படுத்தப்பட்ட ‘மார்க்-2’ இலகு ரக போர் விமானத்துக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதன் கட்டமைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், 2027 மார்ச்சில் முதல் தரைச் சோதனையும், அதே ஆண்டில் முதல் விமானச் சோதனையும் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘மார்க்-2’ தொடர்பான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை.