காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழகத்துக்குரிய 16.01 டி.எம்.சி. நிலுவை நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு தாக்கல் செய்துள்ளது.

மனுவில், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடக அரசு தொடர்ந்து பின்பற்றவில்லை என்றும், ஆணையக் கூட்டங்கள் அல்லது வழக்கு விசாரணைகள் வரும் போதெல்லாம் காரணங்களை முன்வைத்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய முழு அளவு நீரை விடுவிக்காமல் நிலுவையில் வைப்பது வழக்கமாகிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் போதிய நீர்வரத்து இருக்கும் போதே தண்ணீர் திறக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அணைகளின் நீர்மட்டம் உள்ளிட்ட தரவுகளை முன்வைத்து, விகிதாசார அடிப்படையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அளவுடன் ஒப்பிடுகையில் CWMA உத்தரவிட்ட நீர் அளவு குறைவாக இருப்பதாக தமிழக அரசு வாதிட்டுள்ளது. ஜூன் 1 முதல் செப். 9 வரை பிலிகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 16.01 டி.எம்.சி. நிலுவை நீரை பெற்றுத் தர CWMA இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

விவசாய பாதிப்பை சுட்டிக்காட்டிய தமிழக அரசு, காவிரி நீரை நம்பி சுமார் 25 லட்சம் ஏக்கர் நிலம் பாசனப் பரப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது. வழக்கமான நாளில் ஜூனில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், ஆக. 1-ல் தான் அணை திறக்கப்பட்ட நிலையில் தற்போது உள்ள நீர் இருப்பு அடுத்த 25–30 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், நிலுவை நீரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும், CWMA உத்தரவுகளை கர்நாடகா தவறாமல் பின்பற்றுவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு கோரியுள்ளது. மேலும், ஆக. 8-ல் CWMA பிறப்பித்த உத்தரவின்படி 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கனஅடி நீரை திறக்க வேண்டும் என்பதையும் மனு நினைவூட்டுகிறது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.