சமூக வலைதளங்களில் பரவும் சில குறும்படங்கள், அன்றாட வாழ்க்கையின் எளிய தருணங்களாலும் எதிர்பாராத நகைச்சுவை நிகழ்வுகளாலும் அதிக கவனம் பெற்றுவருகின்றன.

அதில் குறிப்பிடத்தக்கதாக, இந்தியரை திருமணம் செய்து பீஹார் மாநில கிராமத்தில் வசிக்கும் அமெரிக்கப் பெண் ஒருவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் பேசுபொருளாகியுள்ளன. “சிங் பேமிலி 2.0” என்ற பக்கத்தில், துணி துவைத்தல், காய்கறி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல், போர்வெல்லில் தண்ணீர் எடுத்தல், சுடுதண்ணீர் காய வைத்தல், சரும பராமரிப்பு போன்ற வீட்டு வேலைகளை வீடியோவாகப் பகிர்கிறார்; இந்திய பாரம்பரிய உடையில் திருமணப் படங்களையும் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் சான் டியாகோவில் நடந்த மற்றொரு சம்பவ வீடியோவும் வைரலாகியுள்ளது. வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் நபரை பார்த்தும், ‘நாஷ்’ என்ற கோல்டன் ரெட்ரீவர் நாய் குரைக்காமல், பொம்மையை வாயில் கவ்வியபடி விளையாட அழைப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதைப் பார்த்த பலர், கோல்டன் ரெட்ரீவர் நாய்களின் நட்புத்தன்மையை குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், ஸ்வாதி சர்மா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல், தாயின் முதல் விமானப் பயணத்தை பதிவு செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லி விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் புன்னகைப்பது, விமானம் நகரும் போது கும்பிட்டு ரசிப்பது போன்ற காட்சிகள் பலரையும் பாதித்துள்ளன.

இதற்கிடையில், ‘ஸ்டெப்’ என்ற வெளிநாட்டு இளைஞர் டில்லி மெட்ரோவின் சுத்தத்தைப் பாராட்டி வெளியிட்ட வீடியோவும் பரவலாக பகிரப்படுகிறது; ஜப்பான், கொரியா, தைவான் மெட்ரோக்களுடன் ஒப்பிட்டு அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல், குஜராத் மாநில ரூரல் ஒலிம்பிக்கில் நடந்த ‘30 நிமிடத்தில் எத்தனை லட்டு’ என்ற போட்டி வீடியோவும் டிரெண்டிங்கில் உள்ளது; இறுதிச்சுற்றில் பல்வந்த்பாய் ரகுவானி 28 லட்டு சாப்பிட்டு வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.