லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கலாம் என்ற நிலையில், அனைத்து கட்சிகளும் பிரசாரத் தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தல் பிரசாரத்திற்காக சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய பஸ்ஸை தயாரித்துள்ளார். இதில் பல அறைகள், கான்பிரன்ஸ் ஹால், கழிப்பறை உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளதாகவும், கூரையில் நின்றபடியே மக்களைச் சந்தித்து பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தகவலின்படி, கரூர் தேர்தல் பிரசாரத்தில் நடிகர் விஜய்க்காக வாகனம் வடிவமைத்தவர் தான் அகிலேஷுக்கான இந்த பஸ்ஸையும் உருவாக்கியுள்ளார். முதல் பஸ் ஏற்கனவே உ.பி. மாநிலத்தை சென்றடைந்துள்ள நிலையில், மேலும் இரண்டு பஸ்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இந்த பஸ்ஸின் முன்புறத்தில் அகிலேஷ் யாதவின் படம் மட்டும் இடம்பெறும் என்றும், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அல்லது கட்சியை தொடங்கிய முலாயம் சிங் யாதவின் படம் கூட இடம் பெறாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், பஸ் மிகப் பெரியதாக இருப்பதால் கிராமங்களின் குறுகிய தெருக்களில் செல்வதும், குறிப்பாக திரும்புவதும் சிரமமாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இதற்கிடையில், மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க முயலும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரத்திற்காக சிறிய வேனை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அகிலேஷின் வாகனத்தை ‘பணக்காரர்கள் பயணிக்கும் வண்டி’ எனவும், தன்னிடம் ‘ஏழைகள் பயணிக்கும் வண்டி’ இருப்பதாகவும் கூறி, இதை ‘ஏழை–பணக்காரர்’ போட்டியாக அவர் சித்தரிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் காணப்படும் சினிமா பாணி பிரசார வடிவமைப்பு வட மாநிலங்களிலும் பரவத் தொடங்கியதாக பேசப்படுகிறது.





