‘சீனாவின் யூடியூப்’ என அழைக்கப்படும் பிலிபிலி (Bilibili) தளம், இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகாத நிலையிலும் இந்திய கண்டன்ட் கிரியேட்டர்களின் கவனத்தை அதிகமாக பெற்றுள்ளது. இந்தியா–சீனா உறவுகள் சீரடைவதும், யூடியூப்பில் வருவாய் ஈட்டும் நடைமுறை கடினமாகி வருவதும் இதற்குக் காரணமாக குறிப்பிடப்படுகிறது.

உலகளாவிய விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக பிலிபிலி தனது சர்வதேச செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், இந்தியக் கலைவடிவங்கள், கிராமப்புற வ்லாக்ஸ், வாழ்க்கைமுறை மற்றும் பயண வீடியோக்கள் போன்றவற்றை உருவாக்கும் பலர் அங்கு கணக்குகளைத் தொடங்கி பதிவேற்றம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

செய்தியின்படி, யூடியூப் தனது விளம்பர மற்றும் பிரீமியம் வருவாய் திட்டங்களுக்கான தகுதி வரம்புகளை 2027 முதல் கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதனால் புதிய படைப்பாளர்களுக்கு வருவாய் பெறுவது மேலும் கடினமாகும் நிலையில், பிலிபிலி குறைந்த அளவிலான பின்தொடர்பவர்களுடன் (சுமார் 1,000 சப்ஸ்கிரைப்பர்கள்) கூட வருவாய் வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சீனாவிலும் உலகளாவிலும் உள்ள பெரிய பார்வையாளர் வட்டத்தை அடையவும் இது உதவுகிறது.

மேலும், செயலியில் உள்ள ஏஐ மொழிபெயர்ப்பு வசதி வீடியோக்களை சீனம் உள்ளிட்ட மொழிகளில் மாற்ற உதவுவதால் மொழித் தடைகள் குறைகின்றன. சீன பார்வையாளர்கள் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கை, பன்முகத்தன்மை, சுற்றுலா இடங்கள் மற்றும் உணவு கலாசாரம் குறித்து ஆர்வம் காட்டுவதாகவும், குறிப்பாக சமையல் மற்றும் காரசார உணவுகள் தொடர்பான வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிலிபிலியின் சர்வதேச சேவை தற்போது இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா போன்ற சந்தைகளில் செயல்படுகிறது. கடந்த மாதம் ஆண்ட்ராய்டுக்கான சர்வதேச செயலி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், விரைவில் iOS பதிப்பும் மேலும் நாடுகளுக்கான சேவைகளும் வரவுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஜார்க்கண்டைச் சேர்ந்த பயண வ்லாகர் நவ்னித் குமார் திவாரி (‘Ghumakkad Nawnit’ யூடியூப் சேனல்) பிலிபிலியில் 15 நாட்களுக்கு முன்பே பதிவேற்றம் தொடங்கியதாக கூறுகிறார். அவர் 700-க்கும் மேற்பட்ட பாலோவர்ஸ்களையும் ஆயிரக்கணக்கான பார்வைகளையும் பெற்றுள்ளதாகவும், இதே நேரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய தளங்களிலும் தனக்கான பார்வையாளர் வட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.