புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்ததாக கூறப்படும் காமெடியனுடன் ராகுல் காந்தி ஒரே மேடையில் தோன்றியதற்கு பாஜ தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக பல்வேறு பாஜ தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டனர்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் “ஜோக்கர்கள், காமெடியன்கள் நிறைந்த கட்சியாக” மாறிவிட்டதாக விமர்சித்தார். மேலும், பிரதமர் மோடியின் பிரபலத்தைக் குறிப்பிட்டு, இந்தியர்கள் பெருமை கொள்கிறார்கள் என்றும் கூறினார்.

மத்திய அமைச்சர் பிரலஹாத் ஜோஷி, ராகுலும் காங்கிரசும் “தார்மீகத் திவால்நிலை” நிலைக்கு சென்றுவிட்டதாக குற்றம்சாட்டினார். மாணவர் நிகழ்ச்சியை பயன்படுத்தி பிரதமரின் மறைந்த தாயாரை அவமதித்ததாகவும், அரசியல் எதிர்ப்பு கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இருக்க வேண்டும்; தனிப்பட்ட தாக்குதல்கள் அரசியல் அல்ல என்றும் தெரிவித்தார்.

டில்லி முதல்வர் ரேகா குப்தா, மேடையில் நடந்தவற்றுக்கு ராகுல் காட்டிய எதிர்வினை அவரது அரசியல் வளர்ப்பை வெளிப்படுத்துகிறது என்றார். பாஜ சி.ஆர். கேசவன், நிகழ்ச்சியில் வயதான பெண்ணை கேலி செய்ததாகவும், இத்தகைய நடத்தை பொதுவாழ்க்கைக்கு பொருத்தமற்றது என்றும் கூறி, இது இளைஞர்களை காங்கிரசிலிருந்து மேலும் விலக்குகிறது என விமர்சித்தார்.