கனடா பிரதமர் மார்க் கார்னி, ஒட்டாவாவில் நடந்த கட்சி கூட்டத்தில் உரையாற்றிய போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தனித்துவமான கைசைகைகளை நகைச்சுவையாக பின்பற்றி காட்டி கவனம் ஈர்த்தார். அந்த தருணம் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்படுத்தியது.

கார்னி தனது உரையில் கனடாவின் பிரமாண்டமான தூய்மை எரிசக்தி திட்டத்தை விளக்கினார். அந்த முதலீடு “18 ஹூவர் அணைகளுக்கு” சமமானது என அவர் குறிப்பிட்டார்.

அந்த இடத்தில், டிரம்ப் உரையின்போது கைகளை முன்னும் பின்னும் அசைத்து பேசும் சைகையை கார்னி அப்படியே செய்து காட்டினார். கனடா மற்றும் அமெரிக்கா இடையே கடுமையான வர்த்தக மோதல் நிலவும் சூழலில் இந்த நகைச்சுவை சம்பவம் நடந்தது.

இதற்கான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பல்வேறு கருத்துகளை பெற்றுள்ளது. மேலும், கடந்த ஜூன் மாதத்தில் வெள்ளை மாளிகை நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்து பேசும் போது டிரம்பின் பேச்சு மற்றும் சைகைகளை கார்னி இதேபோல் பொதுமேடையில் கிண்டல் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.