புதுடில்லி: எல்.ஐ.சி. முதலீட்டுடன் தொடர்புடைய ரூ.2,684 கோடி மோசடி குற்றச்சாட்டில், ‘ரிலையன்ஸ் கேப்பிடல்’ முன்னாள் தலைவர் அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) வழக்குப்பதிவு செய்துள்ளது.

புகாரின் விவரப்படி, 2012 முதல் 2018 வரை ‘ரிலையன்ஸ் கேப்பிடல்’ நிறுவனம் ஐந்து கடன் பத்திரங்களை வெளியிட்டது. அவற்றில் எல்.ஐ.சி. சுமார் ரூ.3,900 கோடி முதலீடு செய்ததாகவும், அந்த நிதி நிறுவனத்தின் பொது தேவைகள், நிதி தேவைகள் மற்றும் ஏற்கனவே உள்ள கடனை குறைப்பதற்காக திரட்டப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் முதலீட்டை ஈர்க்க தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அந்த நிதி முறைகேடாக வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டதாகவும் எல்.ஐ.சி. குற்றம்சாட்டியுள்ளது. இதனால் எல்.ஐ.சி.க்கு ரூ.2,684.57 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அதே அளவுக்கு சட்டவிரோத ஆதாயம் கிடைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்படும் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

மேலும், எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் எல்.ஐ.சி. அளித்த புகார்களின் அடிப்படையில் ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’, ‘ரிலையன்ஸ் கேப்பிடல்’ உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பாக சி.பி.ஐ. ஏற்கனவே எட்டு வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவற்றில் ஆறு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் உள்ளதுடன் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பிலும் உள்ளன.