புதுடில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.

பாரத் மண்டபத்தில் நடந்த இந்த மாநாடு, “விக்சித் பாரத் நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு நிதியளித்தல்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது. இதில் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி பகிர்வு தொடர்பான அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்ட பல மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாட்டில் எடுத்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், தமிழக முதல்வர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி மாநாட்டில் பங்கேற்றதாகவும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும் கூட்டாட்சி உரிமைகளும் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை விரிவாக விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.