தாராபுரம், மதுராந்தகம் சட்டசபை இடைத்தேர்தல்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, இரு தொகுதிகளிலும் ஐந்து முனை போட்டி உருவாகியுள்ளது. முன்னணி கட்சிகள் நட்சத்திர பேச்சாளர்களை அறிவித்துள்ளதால், களத்தில் பிரசாரம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் வென்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஆறு பேர் பதவி விலகி ஆளும் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் தேவை ஏற்பட்டது. இதில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

செப்.9 முதல் 16 வரை வேட்புமனுத் தாக்கல் நடந்த நிலையில், செப்.19 அன்று வாபஸ் பெறும் காலக்கெடு முடிவடைந்து இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டது. தாராபுரத்தில் தவெக சத்யபாமா, திமுக சுகன்யா, அதிமுக பானுமதி, நாதக கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் லட்சுமணன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிடுகின்றனர். மதுராந்தகத்தில் தவெக மரகதம் குமரவேல், திமுக பரந்தாமன், அதிமுக கணிதா சம்பத், நாதக ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சுகந்தி உள்ளிட்ட 27 பேர் களத்தில் உள்ளனர்.

தேர்தல் கமிஷன் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. தவெக சார்பில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர், மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர். திமுக சார்பில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி, உதயநிதி ஆகியோரும்; அதிமுக சார்பில் இபிஎஸ், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தலுக்குப் பிறகு கூட்டணி நிலைப்பாடுகள் மாறியதால் போட்டி மேலும் சிக்கலாகியுள்ளது. முன்பு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் தற்போது தவெக கூட்டணியில் உள்ளன; தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரு தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றன. அதே நேரத்தில், முன்பு அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்துள்ளதால், மதுராந்தகத்தில் அதிமுகவுக்கு இது பின்னடைவாகக் கருதப்படுகிறது.