புதுடில்லி: நாட்டு மக்களின் நலனே அரசின் முதன்மை முன்னுரிமை; வெளிநாட்டு நாடுகளின் அழுத்தத்துக்கு பணிய மாட்டோம் என்று மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தொடர்பான மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க அமெரிக்காவுக்கு வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறுகையில், இந்தியா சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பின்பற்றுகிறது என்றும், பிற நாடுகளின் உத்தரவுகளுக்கேற்ப இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாது என்றும் தெரிவித்தார். நாட்டின் நலன்களுக்கு ஏற்பவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரிகள் நியாயமற்றவை என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும், எந்த நாட்டின் அழுத்தத்துக்கும் இந்தியா பணியாது என்றும் அவர் வலியுறுத்தினார். சாதகமான விலையில் கிடைத்தால் மக்களுக்கு தேவையான கச்சா எண்ணெய்யை எந்த நாட்டிலிருந்தும் வாங்குவோம் என்றும், இந்தியாவின் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.





