மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்பு ஆணையராக உள்ள துக்காராம் முண்டே, பதவியேற்றதிலிருந்து உணவகங்களில் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தி வருகிறார். விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இடங்களில் உடனடியாக பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெய்டுகளின்போது கெட்டுப்போன உணவுகள், காலாவதியான பொருட்கள் மற்றும் கலப்படப் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு சுத்தமான, தரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், துக்காராம் முண்டேவின் கடுமையான அமலாக்கத்தை பாராட்டும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மராத்தி மற்றும் ஹிந்தி மொழிகளில் பேசிக்கொண்டு, அவரது கடும் விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தார்.

அவரது நடவடிக்கைகள் காரணமாக “இப்போது நிம்மதியாகவும் தைரியமாகவும் சாப்பிட முடிகிறது” என்றும் அவர் கூறியுள்ளார். துக்காராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த முதல் பாலிவுட் நடிகை இவரே என பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்.