புதுடில்லி: செப் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் டில்லியில் ‘சிந்தன் சிவிர்’ எனப்படும் ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கூட்டியுள்ளார். இதில் அனைத்து மத்திய அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

மோடி மூன்றாம் முறையாக பிரதமராகி சுமார் இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சுய முன்னேற்றம், மக்களுடன் தொடர்பு, நிர்வாக செயல்திறன் போன்ற அம்சங்கள் விவாதப் பொருளாக இருக்கும் என தகவல்.

மேலும் எதிர்காலத் திட்டங்கள், அமைச்சகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் பிரதமர் பேசுவார் என தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள் தங்களின் செயல்பாடுகளை ‘ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்’ போல குறிப்புகளாக பிரதமரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பல அமைச்சர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. கடந்த ஆறு மாதங்களாக அமைச்சரவை மாற்றம் குறித்து செய்திகள் வந்தாலும் இதுவரை மாற்றம் நடக்கவில்லை. ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மாற்றம் இருக்கலாம் என்ற பேச்சு மீண்டும் வலுப்பெற்றதால், சில அமைச்சர்கள் தங்கள் பொறுப்புகள் பறிபோகுமோ என்ற அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் நடக்குமா, இல்லையா என்பது இரண்டு பேருக்கே தெரியும் — ஒருவர் பிரதமர், மற்றொருவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா — என பா.ஜ.க. வட்டாரங்கள் கூறியதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.