வளரும் நாடுகள்மீது கார்பன் உமிழ்வுக்கான பொறுப்பு தவறாக சுமத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கவலை தெரிவித்தார். இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியின் பாதிக்கும் குறைவாக இருப்பதாகவும், வளர்ந்த நாடுகள் இந்தியாவை விட தனிநபர் அடிப்படையில் சுமார் ஆறு மடங்கு அதிகமாக கார்பன் வெளியேற்றம் செய்கின்றன என்றும் அவர் கூறினார்.

புதுடில்லியில் நடைபெற்ற “சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்கவியலின் எதிர்காலம்” என்ற தலைப்பிலான இருநாள் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் 17 நாடுகள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த உண்மைகளை உலகளாவிய தளங்களில் இந்தியா வலுவாக எடுத்துரைத்து வருவதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான புதிய தரநிலைகளை வகுக்க பிற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் மோடி கூறினார். கடந்த 12 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், வளர்ச்சி வேகமானதோடு நிலையானதுமாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறிய அவர், பாரிசில் நடந்த COP21 உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதிகளை காலக்கெடுவுக்கு முன்பே நிறைவேற்றிய ஒரே ஜி20 நாடு இந்தியா என தெரிவித்தார். 12 ஆண்டுகளுக்கு முன் 2 கிகாவாட்டாக இருந்த சூரிய மின் உற்பத்தி திறன் தற்போது 160 கிகாவாட்டை கடந்துள்ளதாகவும், ‘பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்’ கீழ் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரை சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு வீட்டுக்கு ரூ.80,000 அரசு உதவி வழங்குவதாகவும் கூறினார்.

மேலும் காற்றாலை மின்சக்தி திறன் மூன்று மடங்காக உயர்ந்தது, நீர்மின்சக்தி திறன் அதிகரித்தது, அணுசக்தி துறையிலும் வேகமான முன்னேற்றம் உள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்டதாகவும், அது உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயில் எனவும் கூறி, துாய எரிசக்தி போக்குவரத்தில் புதிய கட்டம் தொடங்கியதாக தெரிவித்தார். 2014க்கு முன் ஆண்டுக்கு 3,000 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், கடந்த ஆண்டு 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையானதாகவும் கூறினார். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறைத்தல்–மறுபயன்பாடு–மறுசுழற்சி அடிப்படையிலான வட்ட பொருளாதாரத்தை மத்திய அரசு ஊக்குவிப்பதாகவும், தினமும் ஆயிரக்கணக்கான டன் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.