சினிமா தணிக்கைக்கான மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) உறுப்பினர்கள் பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 18 பேர் கொண்ட இந்த குழு, தலைவர் சசி சேகர் வேம்பதி தலைமையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் நடிகை பிரீத்தி ஜிந்தா, நடிகர்கள் சுனில் ஷெட்டி, பங்கஜ் திரிபாதி, மலையாள இயக்குநர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், தெலுங்கு தயாரிப்பாளர் சுப்ரியா யார்லகட்டா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இந்த குழுவில் நியமிக்கப்படாதது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் அதிக அளவில் திரைப்படங்கள் உருவாகும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதால், தமிழக திரைப்படத் துறையிலிருந்து பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
இந்த நியமனங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மேற்கொள்கிறது. டில்லி தமிழர்கள் வட்டாரங்களில், இணை அமைச்சர் தமிழரான எல்.முருகன் பதவியில் இருக்கும் நிலையில் கூட தமிழகத்திற்கு இடம் இல்லாமல் போனது வருத்தமாக பேசப்படுகிறது.
மேலும், திரைப்பட பின்னணியுள்ள ஒருவர் தமிழக முதல்வராக இருக்கும் சூழலில், சென்சார் போர்டு போன்ற அமைப்புகளில் தமிழகத்தை ஏன் ஒதுக்குகின்றனர் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.





