சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளும் மீனவர் சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த மனு கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் சார்பில், வழக்கறிஞர்கள் எம்.செந்தில்குமார் மற்றும் எம்.காமேஷ் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ள சூழலில், புதிய கட்டடத்துக்கு ரூ.1,200 கோடி செலவிடுவதற்குப் பதிலாக புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகக் கட்டடத்தை புதுப்பித்து பயன்படுத்தலாம்; அதனால் பெரும் செலவு தவிர்க்கப்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அப்பகுதி மீனவர்களின் நலன் பாதிக்கப்படும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே திட்டத்தை கைவிட உத்தரவிட வேண்டும்; வழக்கு முடிவுக்கு வரும் வரை கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.





