திருநெல்வேலி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மக்கள் சேவையில் போட்டியிட்டு பணியாற்றி வருகிறோம் என்றும், மக்கள் தயவில்தான் ஆட்சி நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டசபையில் எதிர்க்கட்சியினருக்கும் பேசுவதற்கு போதிய வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறினார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேசியதாகவும், முதல்வர் விஜய் பேசும்போது திமுக உறுப்பினர்கள் சுமார் ஒரு மணி நேரம் குறுக்கீடு செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சட்டசபையின் மாண்பை குறைக்கும் வகையில் சிலர் தரையில் அமர்ந்ததாகவும், அதற்கு முதல்வர் அளித்த பதிலடியை அனைவரும் பார்த்ததாகவும் அமைச்சர் கூறினார். தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு சட்டசபை நிகழ்வுகளை மக்கள் அதிக அளவில் நேரலையில் பார்க்கத் தொடங்கியுள்ளதாகவும், ஆட்சியையும் சட்டசபை செயல்பாடுகளையும் மக்கள் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டசபையில் கூட்டம் அதிகமாக இருப்பதால் புதிய கட்டடம் தேவையாக இருக்கலாம் என்றாலும், மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் இறுதி முடிவை முதல்வர் எடுப்பார் என்றும் அவர் கூறினார். முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்வதை விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்த அவர், இத்தகைய பயணங்கள் தமிழகத்திற்கு நல்ல முதலீடுகள் வர வேண்டும் என்பதற்காகவே என விளக்கினார்.

மேலும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சண்முகம் மூத்தவர் என்பதால் அவரது அனுபவத்தை மதிப்பதாகவும், அவர் முன்வைக்கும் விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சட்டசபைக்கு வெளியே அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை குறிப்பிட்டு, சட்டசபை ஏற்கனவே அனைத்து கட்சி மேடையாகவே நடந்ததாகவும், “அரசியல் பேச்சு குறைவு; செயல் அதிகம்” என்பதே தங்களின் அணுகுமுறை என்றும் அவர் கூறினார்.