சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும் இலங்கை தமிழர் அனோஜன் சிவராசாவை மீட்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கேவுக்கு எதிர்க்கட்சி எம்பி மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனோஜன் சிவராசா, சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு சமூக வலைத்தளப் பதிவின் மூலம் மத நிந்தனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டு, ஆரம்பத்தில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 30 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பின்னர் அந்தத் தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால் இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டதை இலங்கை வெளியுறவுத்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் நடவடிக்கைகளை இலங்கை தூதரகம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு சவுதி அரேபியா மன்னர் முகமது பின் சல்மானுடன் நெருக்கமான உறவு இருப்பதாக மனோ கணேசன் குறிப்பிட்டு, இந்தியா தலையிட்டால் மனிதாபிமான அடிப்படையில் உதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.