தற்போதைய காலநிலை காரணமாக தமிழகமெங்கும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சுவாசப் பாதிப்பான ப்ளூ, கொரோனா காய்ச்சல் மற்றும் டெங்கு ஆகியவற்றுடன், உண்ணி மூலம் பரவும் ‘ஸ்கிரப் டைபஸ்’ பாதிப்பும் மக்களை அச்சுறுத்தி வருவதாக அதிகாரிகள் கூறினர்.

‘ஸ்கிரப் டைபஸ்’ என்பது ஒரு வகை பாக்டீரியா தொற்று. ‘ரிக்கட்ஸியா’ பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் போன்றவை மனிதர்களை கடிக்கும் போது இந்த காய்ச்சல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் போன்ற அறிகுறிகள் காணப்படலாம்; கடித்த இடத்தில் சிறிய சிவப்பு தடிப்பு உருவாகும் என்றும் கூறினர்.

இந்தாண்டில் இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் கண்டறியாமல் அலட்சியம் செய்தால் கடித்த இடத்தில் ரத்தக்கட்டு உருவாகி, உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம்; இதன் விளைவாக கோமா, மரணம் போன்ற தீவிர பிரச்னைகள் உருவாகும் என அதிகாரிகள் எச்சரித்தனர். சமீபத்தில் அண்ணா பல்கலை மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையும் அவர்கள் குறிப்பிட்டனர்; புதர்மண்டிய பகுதிகள் உள்ளதால் கவனம் அவசியம் என்றனர்.

பொது மக்கள் வீட்டைச் சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும், புதர் மண்டிய இடங்கள் அல்லது வனப்பகுதிகளுக்கு செல்லும் போது பூச்சிகள், ஒட்டுண்ணிகள் உடலில் படாதவாறு தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் துறை அறிவுறுத்தியுள்ளது. பூச்சிக் கடிக்கு பின் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும் கேட்டுக் கொண்டுள்ளது.