சென்னை: டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ.500 வரை மட்டுமே ரொக்கமாகப் பெறவும், அதற்கு மேற்பட்ட தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டுமெனவும் டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. கூடுதல் விலை வசூல் போன்ற புகார்களைத் தடுக்கவும், கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் மதுபான ஆலை முதல் சில்லறை விற்பனை வரை கணினிமயமாக்கும் திட்டம் 2024ல் செயல்படுத்தப்பட்டது. இதன் கீழ் கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலும் கையடக்க கருவியில் ஸ்கேன் செய்து விற்பனை செய்யப்படுகிறது; கியூஆர் குறியீடு மூலம் டிஜிட்டல் கட்டணமும் செலுத்த முடியும்.
இத்தனை வசதிகள் இருந்தும், வசூலில் பெரும்பங்கு இன்னும் ரொக்கமாகவே இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 80 சதவீதத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் ரொக்கமாக நடைபெறுவதால், பணியாளர்கள் கடைகளில் பணத்தை வைத்திருந்து அடுத்த நாள் வங்கியில் செலுத்துகின்றனர்; பணம் எடுத்துச் செல்லும் போது கொள்ளை சம்பவங்களும் நடப்பதாக கூறப்படுகிறது.
மேலும், டாஸ்மாக் இணையதளத்தில் விருப்பமான மதுவகைகளைத் தேர்வு செய்து ஆன்லைனில் பணம் செலுத்தி, உருவாகும் குறியீட்டை கடைகளில் காட்டி வாங்கும் வசதியும் உள்ளது. ஆனால் இவ்வாறு வாங்குவோருக்கு பாட்டில்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன; இதற்கு ரொக்க வசூலிக்க பணியாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதே காரணம் என டாஸ்மாக் கண்டறிந்துள்ளது.
ஒரு டாஸ்மாக் அதிகாரி கூறுகையில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கவும், சில்லரை தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரூ.500 வரை மட்டும் ரொக்கமாகவும் அதற்கு மேல் டிஜிட்டல் முறையிலும் வசூலிக்க கடைகளுக்கு விரைவில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றார்.





