தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை நிதியை விரைவாக விடுவிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மத்திய அரசை வலியுறுத்தினார்.
டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற, “வளர்ந்த பாரதத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு நிதியளித்தல்” என்ற தலைப்பிலான மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்றார்.
மாநாட்டின் ஓரமாக நிர்மலா சீதாராமனை சந்தித்த மரிய வில்சன், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக் கல்வி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் ஜிஎஸ்டி இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டாட்சி உரிமைகளை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை வழங்கியதாக அவர் கூறினார். மாநிலத்தின் நிதியுரிமை, பேரிடர் நிவாரண நிதி, முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு, மற்றும் நியாயமான வரி பகிர்வு உள்ளிட்ட அம்சங்களும் பேசப்பட்டதாக அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





