சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான பிரசாரப் பணிக்காக பிற மாவட்ட நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி நியமித்துள்ளார்.
ஆனால், மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என தலைமையால் அறிவிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இன்னும் அங்கு சென்று சேரவில்லை என உள்ளூர் நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் பழனிசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளிடமும் அதிர்ச்சி, கவலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உள்ளூர் நிர்வாகிகள் கூறுவதன்படி, தாராபுரம் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவில் திருப்பூர், சேலம், கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தாராபுரத்துக்கான தலைமை பொறுப்பாளராக கட்சியின் பொருளாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டிருந்தாலும், அங்கு பணிகள் பழனிசாமியின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளராக துணை பொதுச்செயலர் முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 33 அமைப்பு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மதுராந்தகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், முனுசாமியின் சொந்த மாவட்டமான கிருஷ்ணகிரியைத் தவிர மற்ற மாவட்ட நிர்வாகிகள் வரவில்லை என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற அருகிலுள்ள மாவட்ட செயலர்கள்கூட மதுராந்தகத்தை எட்டிப் பார்க்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போன் செய்தால் “நாளை வருகிறோம்” என இழுத்தடிப்பதாகவும், வார இறுதியில் வந்த சிலர் கூட ஒருங்கிணைப்பு இல்லாததால் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து வெளியே வரவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
மேலும், இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.-க்கு பா.ம.க. ஆதரவு இல்லை எனவும், தலைமையின் உத்தரவு இருந்தும் நிர்வாகிகள் பாராமுகமாக இருப்பது கட்சிக்குள் அதிருப்தியை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.





