மத்திய பிரதேசத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது மறைந்த தாயையும் கிண்டல் செய்ததாகக் கூறி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்தூர் நகரில் “சத்ரோன் கி கூஞ்ச்” என்ற மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அங்கு நகைச்சுவை கலைஞர் புல்கித் மணியுடன் இணைந்து “மிமிக்ரி” (பல குரல்/நடிப்பு) நிகழ்ச்சியை அவர் நடத்தினார். இதில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் பேசுவது போலவும், கூட்டத்தினரை பார்த்து கையசைப்பது, பின்னர் சிரிப்பது போன்ற உடல்மொழியையும் கிண்டல் செய்து நடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த நிகழ்ச்சியில் பிரதமரின் மறைந்த தாயை அவமதிக்கும் வகையிலும் நடிப்பு இடம்பெற்றதாக பா.ஜ.க. தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து பேசிய ராகுல், இந்திய பிரதமர் வெறும் நட்பை வளர்ப்பதில் மட்டும் ஈடுபடாமல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கிய கடமை என்றும், அந்த நட்பால் மக்களுக்கு என்ன நன்மை எனவும் கேள்வி எழுப்பி விமர்சித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் உள்ளிட்டோர் ராகுல் மேடையில் சிரித்து ரசித்ததாக கூறி கண்டனம் தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு மற்றும் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோரும், மாணவர்களுடனான கலந்துரையாடலை பயன்படுத்தி மறைந்த தாயை கேலி செய்தது மனிதநேயமற்ற செயல் என விமர்சித்துள்ளனர்.