கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய மாணவர்கள் இருவர், பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

செப்.18 அதிகாலை, ஹார்வ்ஸ் ஏர் (Harv’s Air) விமானப் பயிற்சிப் பள்ளிக்குச் சொந்தமான செஸ்னா 172 ரக விமானம் இரவு நேர பயிற்சிக்காக இயக்கப்பட்டது. ரெஜினாவிலிருந்து கார்லைல் வழியாக ஸ்டெய்ன்பாக் (மனிடோபா) நோக்கி சென்றபோது, சஸ்காட்சுவான் அருகே விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரன் திருஞானசம்பந்தம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கனடாவிலுள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், குடும்பங்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படுவதாகவும், இருவரின் உடல்களையும் இந்தியாவுக்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.