புதுடில்லி: டில்லியில் நடைபெறும் எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, பெயர் எழுத்துப் பிழை, வயது தவறாக பதிவு போன்ற தரவு முரண்பாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 33 லட்சம் வாக்காளர்களிடம் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. டில்லியில் உள்ள 1.45 கோடி வாக்காளர்களில், இறப்பு, வேறு தொகுதிக்கு இடமாற்றம், பல இடங்களில் இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் 47.7 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தனியாக, வாக்காளர் விவரங்களில் உள்ள முரண்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் பெயர், வயது, பாகம் எண் மற்றும் முரண்பாட்டிற்கான காரணம் ஆகியவற்றுடன் கூடிய பூத் வாரியான தரவுகளை டில்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் டில்லி முதல்வர் ரேகா குப்தா (பா.ஜ.) பெயரும் இடம்பெற்றுள்ளது. அவருக்கும் அவரது பெற்றோருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 15 ஆண்டுகளுக்கும் குறைவாக காட்டப்பட்டதாக கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக டில்லி தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேபோல், டில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா, பெற்றோர் மற்றும் மகனுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் நோட்டீஸ் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெயர் நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குடிசைப் பகுதிகள் மற்றும் முறையான மனைப்பட்டா இல்லாத சாலையோர குடியிருப்புகளில் வாழும் விளிம்புநிலை மக்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண் மற்றும் நேகா ரதி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்; அதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு இன்று முன்னுரிமையுடன் விசாரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.





