மதுரை: திமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு மீண்டும் தாமதமாகியுள்ளதால், கட்சியின் இளைஞரணிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

த.வெ.க. வெற்றிக்குப் பிறகு, இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுக அமைப்பு சீரமைப்பை தொடங்கியது. அமைப்பு ரீதியாக 77 ஆக இருந்த மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தி, இரண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் நியமிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் 70 வயதை கடந்தவர்கள் அல்லது மூன்று முறை மாவட்ட செயலாளராக இருந்தவர்கள் மீண்டும் அந்தப் பதவிக்கு வர வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, உதயநிதி ஸ்டாலின் பரிந்துரையுடன் இளைஞரணி நிர்வாகிகள் பலர் புதிய பதவிகளுக்கு பரிசீலிக்கப்பட்டதாகவும், பட்டியல் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சில சீனியர் நிர்வாகிகளின் முட்டுக்கட்டையால் அறிவிப்பு தொடர்ந்து தள்ளிப்போவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக “முப்பெரும் விழா” நிகழ்வின்போதும் புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை.

இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்குப் பிறகே அறிவிப்பு வெளியாகக்கூடும் என்ற தகவலும் பரவுகிறது. இளைஞர்களிடையே எழுச்சி உருவாக்கவும், எதிர்மறை பிம்பங்களை எதிர்கொள்ளவும் உடனடி அறிவிப்பு தேவை என இளைஞரணி தரப்பில் வலியுறுத்தப்படுவதாகவும், ஆனால் தலைமைக்கு அருகிலுள்ள சில சீனியர்கள் எதிர்ப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் கூறுகின்றனர்.