தமிழ்நாடு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கு நிதித்துறை ஒப்புதல் பெறுவதில் தாமதம் நீடிப்பதாகவும், திட்ட அறிக்கைகளில் பல்வேறு கேள்விகளை எழுப்பி கோப்புகளை திருப்பி அனுப்புவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் நடைபெற்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில், முதல்வர் சார்பில் 17 அறிவிப்புகளும், 51 துறைகள் சார்பில் 1,117 அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. ஆனால், அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளியிடப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்த துறைகள் திட்ட அறிக்கைகளைத் தயாரித்து நிதித்துறைக்கு அனுப்ப வேண்டும்; நிதித்துறை ஒப்புதல் கிடைத்த பிறகே புதிய திட்டங்களுக்கு அரசாணை வெளியிட முடியும். மதிப்பீடு அல்லது கணக்கீட்டில் சந்தேகம் ஏற்பட்டால் நிதித்துறை கேள்விகள் எழுப்பி கோப்புகளை மீண்டும் துறைகளுக்கு அனுப்பும் என வட்டாரங்கள் கூறின.

பல கோப்புகளில் செலவு, நடைமுறை சாத்தியம் உள்ளிட்ட அம்சங்களில் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பப்படுவதாகவும், குறிப்பாக சில மூத்த அமைச்சர்கள் முதல்வரின் ஒப்புதலுடன் அறிவித்த “கவர்ச்சி” திட்டங்களுக்குக் கூட அதிக செலவு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட கோப்புகள் துறைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிதித்துறை கேள்விகளுக்கு உரிய பதில்கள் வந்தால் ஒப்புதல் வழங்க முடியும் என நிதித்துறை தரப்பு கூறும் நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் இசைவுடன் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்க மறுப்பது சரியல்ல என துறை தரப்பு வாதிடுகிறது. 2027 பிப்ரவரி அல்லது மார்ச்சில் அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், இந்த விவகாரத்தை தலைமைச் செயலர் மற்றும் முதல்வரின் தனிச் செயலர்களின் கவனத்துக்கு துறைச் செயலர்கள் கொண்டு சென்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.