புதுடில்லி: கோபர்தன் திட்டத்தின் கீழ் அழுத்தப்பட்ட சாண எரிவாயு (சி.பி.ஜி.) தயாரிப்போருக்கு மத்திய அரசு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. தகுதியுள்ள உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் எரிவாயுவில் 100 சதவீதம் வரை உறுதியான கொள்முதல் (offtake) பெறும் தேர்வை பயன்படுத்தலாம். அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலை குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ல் ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட கோபர்தன் (தேசிய சுழற்சி உயிரி ஆற்றல் திட்டம்) மூலம் மாட்டு சாணம், வேளாண் கழிவுகள், சமையலறை மற்றும் சந்தைக் கழிவுகள் போன்றவை சேகரிக்கப்பட்டு, அவை சி.பி.ஜி. மற்றும் இயற்கை உரமாக மாற்றப்படுகின்றன. சி.பி.ஜி. உற்பத்தியை உயர்த்த ரூ.23,731 கோடி மதிப்பிலான திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின்படி, நடப்பு நிதியாண்டு முதல் 2035-36 வரை திட்டம் செயல்படுத்தப்படும். புதிய ஆலைகளுக்கு, ஆலையின் உற்பத்தித் திறனை அடிப்படையாகக் கொண்டு, ஒரு நாளில் உற்பத்தியாகும் 1 டன் திறனுக்கு ரூ.2 கோடி வரை நேரடி மூலதன நிதியுதவி வழங்கப்படும். இந்த உதவி ஆலைக்கு மட்டுமல்லாமல், கிராமங்களில் இருந்து சாணம் எடுத்துவரும் டிராக்டர்கள் உள்ளிட்ட கழிவு கையாளும் கருவிகளுக்கும் பொருந்தும்.

புதிய விதிகளின்படி, நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள் சி.பி.ஜி.யை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது; உறுதியான கொள்முதல் தேர்வு பயன்படுத்தப்படும் நிலையில் உற்பத்தியாகும் எரிவாயுவை அரசு முழுமையாக வாங்கும் வகையில் அமைப்பு இருக்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ளாத நகர எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக எரிவாயு ஒதுக்கீட்டை மறுசீரமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தேவை உருவாக்கும் நோக்கில், வாகனங்களில் பயன்படுத்தப்படும் சி.என்.ஜி.யில் சி.பி.ஜி. கலவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது: நடப்பு நிதியாண்டில் 3%, அடுத்த நிதியாண்டில் 4%, 2028-29ல் 5% என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் (294 கிலோவாட் மணி)க்கு ரூ.2,110 என்ற நிலையான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது; 95% மீத்தேன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் கிலோக்கு ரூ.98 வழங்கப்படும். இந்த விலை 2036 மார்ச் 31 வரை 10 ஆண்டுகள் அமலில் இருக்கும். ஒவ்வொரு திட்டத்துக்கும் அதிகபட்சமாக ரூ.30 கோடி வரை மூலதன உதவி தவணை முறையில் வழங்கப்படும்; மேலும் சி.பி.ஜி. கொள்முதல் மற்றும் ஒருங்கிணைப்புக்கான ஆப்பரேட்டராக அரசு நிறுவனமான ‘கெயில்’ நியமிக்கப்பட்டுள்ளது. கடன் உத்தரவாத ஆதரவு மற்றும் குழாய் கட்டமைப்பு வசதிகள் போன்ற ஏற்பாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.