திருப்பூர்: கோவில் சொத்துகள் தொடர்பான முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீரங்கம் கோவில் சொத்தின் மூலப்பத்திரம் காணவில்லை என கூறப்பட்ட நிலையில், புதுச்சேரியில் அதற்கான சான்று பெறப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் விற்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தற்போது தி.மு.க. அலுவலகம் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில் தி.மு.க., தி.க. மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படும் தகவல்களை ஹிந்து முன்னணி திரட்டி வருவதாக தெரிவித்தார். யார் ஆக்கிரமித்திருந்தாலும் நீதிமன்ற வழிமுறைகள் மூலம் கோவில் சொத்துகளை மீட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கோவில் நில ஆக்கிரமிப்பு, போலி ஆவணங்கள் தயாரிப்பு போன்றவை அதிகாரிகளின் துணையின்றி நடக்காது எனக் கூறிய அவர், உடந்தையாக இருந்ததாக கூறப்படும் ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். புகார்களை முழுமையாக விசாரித்து நிலங்களை மீட்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஹிந்து முன்னணி ஆதரவளிக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





