‘டாக் சேவா கிப்ட்ஸ்’ என்ற பெயரில் இணையதள மோசடி நடப்பதாகவும், பொதுமக்கள் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பரவும் ஒரு விளம்பரத்தில், இந்திய தபால் துறை சிறப்பு பரிசு/வெகுமதி திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது வதந்தி என்றும், இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் தபால் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

தங்களால் எந்தவிதமான பரிசு, வெகுமதி அல்லது குலுக்கல் திட்டமும் நடத்தப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வைரலாக பரவும் அந்த தகவலை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அந்த விளம்பரத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், வங்கி கணக்கு விவரங்கள், ஓ.டி.பி., ஆதார் எண் போன்ற ரகசிய தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம் என்றும் இந்திய தபால் துறை அறிவுறுத்தியுள்ளது.