ஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கி போட்டியில் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி இந்தோனேசியாவை 17-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது. இந்தப் போட்டி அய்ச்சி–நகோயாவில் நடைபெற்றது.

முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 19-0 என பெரும் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, அதே வேகத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி தொடர்ந்து கோல்கள் குவித்தது.

உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக 8 கோல்கள் அடித்து கவனம் பெற்ற 22 வயதான தீபிகா ஷெராவத், இந்த ஆட்டத்திலும் முன்னணியில் இருந்து கோல் மழை பொழிந்தார். அவர் 8, 28, 40-வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் நிறைவு செய்தார்.

மேலும் ருதுஜா (15, 20, 38) மற்றும் நவ்நீத் கவுர் (35, 56, 57) ஆகியோரும் தலா ஹாட்ரிக் கோல்கள் பதிவு செய்தனர். சுனெலிதா, லால்ரெம்சியாமி, சாக்ஷி ரானா ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர். கேப்டன் சலிமா மற்றும் இஷாக் சவுத்ரி தலா ஒரு கோல் சேர்த்தனர். பதிலுக்கு இந்தோனேசியா ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.

இதன் மூலம் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி அடுத்ததாக செப். 23 அன்று நடைபெறும் போட்டியில் தாய்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.