மறைமலைநகர் அருகே யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான சொகுசு கார் மோதி 55 வயது பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் (MACT) உத்தரவிட்டுள்ளது.
வழக்கு ஆவணங்களின்படி, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரைச் சேர்ந்த பத்மாவதி (55), 2023 மே 25 அன்று இரவு 8.30 மணியளவில் நகராட்சி அலுவலகம் அருகே நடந்து சென்றபோது, எதிர்திசையில் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வந்ததாக கூறப்படும் கார் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இழப்பீடு கோரி அவரது குடும்பத்தினர் சென்னை தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தனர். நீதிபதி ஏ.பி. நஷீர் அலி முன்னிலையில் நடந்த விசாரணையில், பாதிக்கப்பட்டவர் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றதால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்து நேரத்தில் ஓட்டுநரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதால் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் காப்பீட்டு நிறுவனம் வாதிட்டது.
ஆனால், தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கை (FIR) அடிப்படையில் விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என தீர்ப்பாயம் குறிப்பிட்டது. மேலும், பத்மாவதி கவனக்குறைவாக நடந்தார் என்பதற்கான ஆதாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தது. உரிமம் இல்லாத காரணம் மட்டும் கொண்டு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு செலுத்தாமல் விலக முடியாது என்றும் தீர்ப்பாயம் கூறியது.
இதன்படி, ‘இண்டஸ் இண்ட் ஜெனரல் இன்சூரன்ஸ்’ நிறுவனம் 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு இழப்பீட்டை முதலில் வழங்க வேண்டும் என்றும், பின்னர் அந்த தொகையை வாகன உரிமையாளரான இர்பானிடமிருந்து வசூலிக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டது. உயிரிழந்தவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றியிருந்ததை கருத்தில் கொண்டு, எதிர்கால வருவாய் இழப்பு உள்ளிட்ட காரணிகளை கணக்கில் எடுத்தே இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டதாக தீர்ப்பாயம் தெரிவித்தது.





