அயோத்தியில் உள்ள ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) ஜிதேந்திரா மிஸ்ரா இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவிலில் பக்தர்களின் காணிக்கைகளில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இனி இப்படியான சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் நோக்கில் புதிய சிஇஓவை நியமிக்க அறக்கட்டளை முடிவு எடுத்தது.

விண்ணப்பங்கள், நேர்காணல் உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பிறகு மூன்று பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில், விமானப்படையில் ஏர் மார்ஷல் பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜிதேந்திரா மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார்.

பொறுப்பேற்பு நிகழ்வின்போது அறக்கட்டளை சார்பில் அவருக்கு அயோத்தி ராமரின் படம் பரிசளிக்கப்பட்டது. மிஸ்ரா நேற்றிரவே ராம் மந்தீர் வளாகத்திற்கு வந்து, யாத்ரி சுவிதா கேந்திராவில் கட்டப்பட்டு வரும் தனது அலுவலகத்தை பார்வையிட்டு, பின்னர் ராமரை வழிபட்டார்.

செய்தி குறிப்பின்படி, மிஸ்ராவுக்கு விமானப்படையில் 39 ஆண்டுகள் அனுபவம் உள்ளது; போர் விமானம் இயக்கிய அனுபவமும் உள்ளது. 2025 ஜனவரியில் மேற்கு வான் கட்டளை பிரிவின் தலைவராக பொறுப்பேற்ற அவர், பாகிஸ்தானுக்கு எதிரான “ஆப்பரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்கு தலைமை ஏற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.