புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால அர்ப்பணிப்புள்ள பொதுச் சேவையை கொண்டாடும் வேளையில், இந்தியாவில் மாற்றங்கள் “நம் கண்முன்னே” தெளிவாக உருவாகி வருவதாக பாஜ தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.
தன் சமீபத்திய அனுபவத்தை பகிர்ந்த அவர், டில்லியிலிருந்து மீரட்டிற்கு சாலை வழியாகப் பயணம் செய்ததாகவும், நீண்டகால தொலைநோக்கு திட்டங்கள் நடைமுறையில் நனவாகும் உணர்வை நேரில் கண்டதாகவும் கூறினார். முன்பு 3 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்த பயணம், இப்போது சுமார் 45 நிமிடங்களில் சிரமமின்றி முடிகிறது என அவர் குறிப்பிட்டார்.
டில்லி–மீரட் விரைவுச்சாலை லட்சக்கணக்கான பயணிகளின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பீஹாரில் சாலைக் கட்டுமானத் துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவத்தை முன்வைத்து, ஒரு நல்ல சாலை என்பது வரைபடத்தில் இரண்டு இடங்களை இணைப்பதைவிட மேலானது என்றார்.
அத்தகைய இணைப்புகள் ஒரு விவசாயியை சந்தையுடன், ஒரு மாணவரை பள்ளியுடன், ஒரு நோயாளியை மருத்துவமனையுடன் சரியான நேரத்தில் இணைக்க உதவுகின்றன என்றும் அவர் கூறினார். உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து இணைப்புகள் குறித்த நீண்டகால கனவுகள் நனவாகும் இந்தியாவாகவும், நவீன உள்கட்டமைப்பு வளர்ச்சி நாட்டின் முன்னேற்றப் பயணத்தை மேலும் வலுப்படுத்துவதாகவும் நிதின் நபின் தெரிவித்தார்.





