கோட்டயம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டம் பூஞ்சார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட எருமலி பகுதியில், 2018 பெருவெள்ளத்தில் கடுமையாக சேதமடைந்த அமக்குன்னு பாலத்திற்கு பதிலாக கட்டப்பட்ட புதிய பாலம் திறக்கப்பட்டது. பழைய பாலம் சேதமடைந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, புதிய பாலம் கட்டி இணைப்பை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முந்தைய இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்.) ஆட்சிக் காலத்தில், கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்போதைய பூஞ்சார் எம்.எல்.ஏ. செபாஸ்டியன் குலத்துங்கல், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.80 லட்சம் ஒதுக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், பணிகள் முடிவடைவதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
பின்னர் பூஞ்சார் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செபாஸ்டியன் எம்.ஜே. வெற்றி பெற்று தற்போதைய எம்.எல்.ஏ. ஆனார். கட்டுமானம் நிறைவடைந்த நிலையில், பாலம் திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பாலம் உருவாக முக்கிய காரணமாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. குலத்துங்கலே திறந்து வைக்க வேண்டும் எனக் கூறி, தற்போதைய எம்.எல்.ஏ. அவரை முதன்மை விருந்தினராக அழைத்தார். இருவரும் இணைந்து ரிப்பன் வெட்டி பாலத்தை முறைப்படி திறந்து வைத்தனர்.





