மூத்த நடிகை ராதா, தனது அக்கா நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் மீது மோசடி முயற்சி தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில், சென்னை போரூரில் ‘ARS கார்டன்’ என்ற பெயரில் தொழில் நடத்தி வருவதாகவும், தொழில் காரணமாக வெளியூர் செல்லும் நேரங்களில் அவசர தேவைக்காக கையெழுத்திட்ட சில செக்குகளை தனது அறையில் வைத்திருப்பது வழக்கம் எனவும் ராதா தெரிவித்துள்ளார்.

2025-ல் தொழில் பெயர் ‘RR கார்டன்’ என மாற்றப்பட்டதாகவும், இதை தனது தொழில் கணக்கு உள்ள ஐடிபிஐ வங்கிக்கு அறிவித்ததையடுத்து புதிய செக் புத்தகம் வழங்கப்பட்டதால் பழைய செக் புத்தகம் பயன்பாட்டில் இல்லாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

செப். 17-ல் வங்கியிலிருந்து வந்த இ-மெயிலில், பயன்பாட்டில் இல்லாத பழைய செக் புத்தகத்திலிருந்து 5 செக்குகள் அம்பிகா பெயரில் சுமார் ₹46 கோடி அளவுக்கு பணமாக்க வங்கியில் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாக ராதா கூறினார். இதையடுத்து உடனடியாக அந்த பண பரிமாற்றத்தை நிறுத்துமாறு வங்கிக்கு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த செக்குகளை பூர்த்தி செய்தது தனது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் என விசாரணையில் தெரிய வந்ததாகவும், அவர்மீது ஏற்கனவே ‘பெமா’ வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் ராதா தெரிவித்துள்ளார். வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டின் தளத்தளத்தில் அம்பிகா வசிப்பதாகவும், தாம் இல்லாத நேரத்தில் மேல் தளத்தில் உள்ள வீட்டிற்குள் சென்று செக்குகளை திருடி மோசடியில் ஈடுபட இருவரும் முயன்றதாகவும் கூறி, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.