சென்னை கடற்கரையில் பேனா சிலையை “வைத்தே தீருவோம்” என்று பிடிவாதம் பிடிக்கும் ஆட்சியாளர்கள் நாங்கள் அல்ல என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். மக்கள் கருத்துகளுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் செவி கொடுத்து முடிவெடுக்கும் ஆட்சி எனவும் அவர் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக–கம்யூனிஸ்ட் கூட்டணி உறுதியானதும் ஜனநாயகப் பூர்வமானதும் என தெரிவித்தார். அந்த கூட்டணியைப் பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சனம் முன்வைக்கலாம்; அது அவர்களின் உரிமை என்றும் அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீனவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் கருத்துகளைப் பெற்று முடிவை மறுபரிசீலனை செய்ய முதல்வருக்கு உரிமை உள்ளது என ராஜ்மோகன் கூறினார். புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பெரிய அதிகாரிகள் மீது புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி தொடர்பான விவகாரத்தை “கொடூரமானது” என கூறிய அவர், திமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இடதுசாரிகள் என்ன நிலைப்பாடு எடுத்துள்ளனர் என கேள்வி எழுப்பினார்.