இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக த.வெ.க. அறிவித்த “நட்சத்திர பேச்சாளர்கள்” பட்டியலில் கூட்டணி மற்றும் பிற கட்சித் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை, வைகோ, திருமாவளவன் போன்ற தனித்தனி அரசியல் கட்சித் தலைவர்கள் எந்த சட்டத்தின் அடிப்படையில் மற்றொரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர் என கேள்வி எழுப்பினார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு ஏழு நாட்களுக்குள் அந்த பட்டியலை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காலக்கெடு முடிந்த நிலையில், பட்டியலில் உள்ளவர்கள் பிரசாரம் செய்தால், தேர்தல் கமிஷன் விதிப்படி அவர்களின் பிரசாரச் செலவு முழுவதும் த.வெ.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பா.ஜ. தமிழக செயலர் தியாகராஜன், த.வெ.க. பட்டியலில் காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், வி.சி.க. தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு, ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, துரை வைகோ, முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகி தீன் உள்ளிட்ட பிற கட்சி தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறினார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 77ன் படி அந்தந்த கட்சியினரை மட்டுமே நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்க முடியும் என வலியுறுத்திய அவர், இப்படியான பட்டியலை தேர்தல் கமிஷன் அங்கீகரித்தது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கமிஷன் செயல்படுகிறது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது என்றும் குற்றம்சாட்டினார்.





