தி.மு.க. தலைவர் உதயநிதி, தமிழக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, மாநிலம் இன்று “சர்க்கஸ் கும்பலிடம் சிக்கி நிற்கிறது” என குற்றம்சாட்டினார்.

சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடியில், தி.மு.க. நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் பேசிய அவர், முதல்வரின் சொந்தத் தொகுதியான பெரம்பூரில் மின்வெட்டு காரணமாக மக்கள் தினமும் சாலை மறியலில் ஈடுபட வேண்டிய நிலை இருப்பதாக கூறினார்.

சட்டசபையில் கேள்வி எழுப்பினால் ஆளுங்கட்சியினர் பாடல் பாடுவதாகவும், சட்டமன்றம் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியாக மாறிவிட்டதுபோல் தோன்றுவதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், முதல்வர் பேசும்போது ‘பஞ்ச் டயலாக்’ மட்டுமே பேசுவதாகவும், கேமரா கோணங்களை பார்த்து சபாநாயகரிடம் ‘டேக்’ போகலாமா என கேட்டு, அவர் ‘ஆக்‌ஷன்’ சொன்னதும் பேசத் தொடங்குவதாகவும் கிண்டலிட்டார். “என் டேபிளில் மூன்று பைல் இருக்கு; ஓபன் பண்ண வச்சிராதீங்க” என்ற முதல்வரின் கருத்தை குறிப்பிட்டு, உடனே திறந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டும் இதுவரை பதில் இல்லை எனவும் கூறினார்.

அரசுக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளதாகவும், தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து வென்றவர்களின் ஆதரவில்தான் தற்போதைய ஆட்சி இயங்குகிறது எனவும் அவர் தெரிவித்தார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியதால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக கூறி, ஆட்சியாளர்களின் “கூத்து, அட்டூழியங்களை” மக்களிடம் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.