சென்னை: கிரானைட் தொழிலதிபர் வீரமணி தொடர்பான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய் சென்னை போலீஸ் கமிஷனருக்கு நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கிரானைட் வர்த்தகர் வீரமணி, போக்சோ சட்டத்தின் கீழ் சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. விசாரணையில், வீரமணியின் வீட்டிற்கு சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மேலும் சில தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் சிறுமிகளை அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் வெளிவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனைகளில் முக்கிய ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், வீரமணியும் அவரது கூட்டாளிகளும் பாலியல் வன்கொடுமை செய்ததாக மேலும் சில சிறுமிகள் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய தனிப்படைக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக தகவல். கடந்த இரண்டு நாட்களில் கமிஷனர் அமல்ராஜுவுடன் முதல்வர் விஜய் இருமுறை ஆலோசனை நடத்தியதாகவும், இதில் தொடர்புடைய ஒருவரையும் தப்ப விடக்கூடாது என அவர் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





