அக்.2ஆம் தேதி ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதியை விரிவுபடுத்துவதே திட்டத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

திட்டம் அமல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து செப்.21 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் மொத்த 18,413 பஸ்களில், 12,692 பஸ்கள் (சுமார் 69%) இந்தத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் தினமும் 84.32 லட்சம் பெண் பயணிகள் பயனடைவார்கள் என்றும், மாணவிகள் தொலைதூரக் கல்லூரிகளுக்குச் செல்லவும், பெண்கள் பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகளுக்காகவும் கட்டணமின்றி பஸ்களில் பயணிக்க முடியும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.