சென்னை: ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தமிழக துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்ட பதிவில், 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றதையும், அதே போட்டியின் தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியதையும் குறிப்பிட்டார்.
இந்திய வீராங்கனைகளின் சாதனைகள் பாராட்டுக்குரியவை என்றும், இளம் தலைமுறையினர் இலக்கை நிர்ணயித்து விடாமுயற்சியுடன் முயன்றால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையையும் ஊக்கத்தையும் இது அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் புதிய வரலாறுகளைப் படைக்க வேண்டும் என்றும் கூறினார்.
இளவேனில் வாலறிவன் (27) தமிழகத்தின் கடலூரில் பிறந்தவர்; குஜராத் பல்கலையில் பயின்றுள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, உலகக் கோப்பை பைனல், உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் பல பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.
ஆசிய விளையாட்டில் முதல் முறையாக பதக்கம் கைப்பற்றிய அவர், 2020 மற்றும் 2024 ஒலிம்பிக்கிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2022ஆம் ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.





