சென்னை: நீர்வளத்துறை (WRD) விற்பனைக்காக குவித்து வைத்திருந்த செம்மண் திருடப்பட்டதாக கூறப்படுவதால், அரசுக்கு சுமார் ரூ.12 கோடி வருவாய் கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 2020-ல் உருவாக்கப்பட்ட கண்ணன்கோட்டை–தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்துக்கு, கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீரை திருப்பும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டது. அந்த கால்வாய் பணிகளுக்காக பொக்லைன் மூலம் அகற்றப்பட்ட மண்ணிலிருந்து செம்மண் கிடைத்தது.
அகற்றப்பட்ட செம்மண் சுமார் 3.53 லட்சம் கனமீட்டர் அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை விற்பனை செய்ய கடந்த ஜனவரியில் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழு அளவீடு செய்து விலையும் நிர்ணயித்தது. தொடர்ந்து, கொசஸ்தலையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மூலம் கடந்த மார்ச்சில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
ராஜப்பா என்பவர் மூலம் பணிகள் எடுக்கப்பட்டு, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஆர்.எம். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிபந்தனைகளின்படி அரசுக்கு ரூ.11.51 கோடி செலுத்த வேண்டும்; ஜிஎஸ்டியாக ரூ.33.4 லட்சமும், பாதுகாப்பு முன்பணமாக ரூ.57.5 லட்சமும் செலுத்த வேண்டும் என கூறப்பட்ட நிலையில், பாதுகாப்பு முன்பணம் மட்டும் செலுத்தப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிறகு த.வெ.க. அரசு பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் ஆன நிலையிலும், செம்மண்ணை எடுத்துச் செல்ல தேவையான முழுத் தொகையை நிறுவனம் இன்னும் செலுத்தவில்லை. அரசியல்வாதிகள் சிலரின் ஆதரவுடன் செம்மண் அதிகளவில் திருடி விற்பனை செய்யப்பட்டதாகவும், துறையின் முக்கியப் புள்ளிக்கு கமிஷன் கேட்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இம்மாத இறுதிக்குள் முழுத் தொகை செலுத்தாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்; பாதுகாப்பு முன்பணம் பறிமுதல் செய்யப்படும் என நீர்வளத்துறை எச்சரித்துள்ளது.





