டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை முன்வைத்து காங்கிரசை பா.ஜ. கடுமையாக விமர்சித்துள்ளது.
நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ. செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, அன்சாரி ஏ.ஜி. நூரானி 2019ல் எழுதிய “ஆர்.எஸ்.எஸ்.: இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல்” என்ற புத்தகத்தை குறிப்பிட்டு பேசியதாக கூறினார். அந்த நூலில் முன்னாள் பிரதமர் நேரு கூறியதாக சொல்லப்படும் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக அன்சாரி சுட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
திரிவேதி கூறியதன்படி, முன்னாள் வெளியுறவு செயலர் ஜகத் சிங் குண்டேவியா பதிவு செய்ததாக கூறப்படும் குறிப்புகளை அன்சாரி எடுத்துரைத்தார். அதில், வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் நேரு, இந்தியாவுக்கு உண்மையான ஆபத்து கம்யூனிசம் அல்ல; மாறாக “ஹிந்து வலதுசாரி வகுப்புவாதம்” என கூறியதாக குறிப்பிடப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த கருத்துகளை எடுத்துரைத்ததற்காக அன்சாரியை “பாராட்டுகிறோம்” என திரிவேதி தெரிவித்தார். இதன் மூலம் காங்கிரசின் சித்தாந்த பின்னணி வெளிப்பட்டதாகவும், காங்கிரஸ் “முஸ்லிம் லீக்–மாவோயிஸ்ட் காங்கிரஸ்” ஆக மாறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்; ஹிந்துக்களை துாற்றுவது காங்கிரசின் குடும்ப வழக்கம் எனவும் விமர்சித்தார்.
டெல்லி நிகழ்ச்சியில் அன்சாரி கூறியதாக தெரிவிக்கப்பட்ட இந்த கருத்துகள், பா.ஜ.–காங்கிரஸ் இடையிலான அரசியல் மோதலில் புதிய விவாதமாக மாறியுள்ளது.





