முன்னாள் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்தின் போது கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் கணக்கில் வராத ரொக்கம் குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்து, சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று எடுத்துக்கொள்ள மறுத்தது.

மனுவில் குறிப்பிடப்பட்ட விவரங்களின்படி, 2025 மார்ச் 14 அன்று டெல்லியில் உள்ள வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது, வீட்டின் ஒரு அறையில் இருந்து எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றமும், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவும் ஆய்வு செய்ததில், வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. பாராளுமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பதவிநீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில், அவர் நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த மனுவை வழக்கறிஞர் கன்ஷியாம் உபாத்யாயா தாக்கல் செய்திருந்தார். விசாரணையின் போது நீதிபதி அமித் பன்சால், மனுவை எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும், இது பழிவாங்கும் நடவடிக்கையாகத் தோன்றுகிறது என்றும் கூறி, எப்.ஐ.ஆர் கோரிக்கைக்காக ஏன் விசாரணை நீதிமன்றத்தை அணுகவில்லை என கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றத்தின் கருத்துகளுக்குப் பிறகு மனுதாரர் மனுவை திரும்பப் பெற்றார். இதே கோரிக்கையுடன் முன்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகஸ்ட் 7 அன்று தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது என்றும் குறிப்பிடப்பட்டது.