டப்ளின்: பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுளுக்கு, ஐரோப்பிய யூனியனின் பொதுத் தரவு பாதுகாப்பு விதிமுறை (ஜிடிபிஆர்) மீறல் தொடர்பாக ரூ.4,435 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கூகுளின் ஐரோப்பிய தலைமையகம் அயர்லாந்தில் இருப்பதால், அந்நாட்டின் தரவு பாதுகாப்பு ஆணையமே இந்த விசாரணையை முன்னெடுத்தது. பயனர்களின் அனுமதியின்றி அவர்களின் தனிப்பட்ட இருப்பிடத் தகவல்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணையில், “வெப் & ஆப் ஆக்டிவிட்டி” எனப்படும் டிஜிட்டல் டைரி அம்சம் மற்றும் இருப்பிட வரலாறு மூலம் பயனர் தகவல்கள் கண்காணிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள “இருப்பிட துல்லியத்தன்மை” அமைப்பில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியனில் தனியுரிமை விதிகளை மீறியதாக கூகுளுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களில் இது நான்காவது மிகப்பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





