செப்.28ல் முதல்வர் விஜய் பங்கேற்று தொடங்கி வைக்க இருந்த தாய்மாமன் தங்கமோதிர திட்ட நிகழ்ச்சி, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. தொடக்க நிகழ்ச்சிக்கான ஆரம்ப ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒரு கிராம் எடையிலான 1,106 தங்கமோதிரங்கள் உசிலம்பட்டி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. தற்போது நிகழ்ச்சி இடம் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மதுரை, உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் அரசு மருத்துவமனைகள் தங்கமோதிரம் வழங்கும் மையங்களாக செயல்படும். இதற்காக அந்த மையங்களில் பாதுகாப்பு பெட்டக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளுடன் இணைந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை மையங்கள் மற்றும் நகர்ப்புற மையங்களில் இந்த ஆண்டு ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்கு தொடர்ந்து தங்கமோதிரம் வழங்கப்படும்.

மதுரை அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 1,000 முதல் 1,200 வரை பிரசவங்கள் நடைபெறுகின்றன. முதற்கட்டமாக அங்கு 4,150 மோதிரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதல்வரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ஏடிஎம் கார்டு வடிவ அட்டைக்குள் மோதிரம் வைக்கப்பட்டுள்ளது. செப்.27ல் பிறக்கும் குழந்தைகள் மற்றும் அதற்கு முன் பிறந்த குழந்தைகள் என 50 பேருக்கு மருத்துவமனை ஆடிட்டோரியம் அல்லது முதலுதவி பிரிவில் முதல்வர் மோதிரம் வழங்க உள்ளார்; பின்னர் மகப்பேறு வார்டில் உள்ள குழந்தை பெற்ற பெண்களில் 20 பேரை தரைத்தளத்திற்கு வரவழைத்து மோதிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான வசதிகள் உள்ளதா என்பதை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார், மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. செப்.22 அன்று சென்னையிலிருந்து வரும் அதிகாரிகள் குழு இடத்தை பார்வையிட்ட பின், மோதிரம் வழங்கும் பகுதி மற்றும் நேரம் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.